Powered By Blogger

Saturday, April 3, 2010

பன்னாட்டுக் சிறுவர் கதைகள்

வயிற்றுப் பிழைப்புக்காக...

குரங்குக் குட்டி பல்லைக் காட்டி அனைவரையும் மிரட்டியது. குரங்குக்குட்டிக்கு ஒல்லியான கைகளும், கால்களும் இருந்தன. தனது நீண்ட வாலால் மரத்தின் கிளையைப் பிடித்துக்கொண்டு தலைகீழாகத் தொங்கியது. தலையில் அலுமினியப் பாத்திரத்தை வைத்துக் கொண்டு ஆடி ஆடி நடந்தது.

குரங்காட்டி குரங்குக்குட்டியின் இடுப்பில் கயிற்றைக் கட்டியிருந்தான். கயிற்றைச் சுண்டியிழுத்த பொழுதெல்லாம் குரங்குக் குட்டி, குட்டிக் கரணம் அடித்தது. குரங்காட்டி பாடினால், குரங்குக்குட்டி ஆடியது.

பார்த்துக் கொண்டிருந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காசுகளை விரித்திருந்த துணியில் போட்டனர்.

குரங்குக் குட்டி காசு ஒன்றை எடுத்துக் கடித்துப் பார்த்தது. காசை அதனால் தின்ன முடியவில்லை. குரங்காட்டியைப் பார்த்தது. குரங்காட்டி பையிலிருந்து ஒரு வாழைப்பழத்தை எடுத்து குரங்குக் குட்டிக்குக் கொடுத்தான். குரங்குக்குட்டி மகிழ்வோடு தின்றது.

குரங்காட்டி காசுகளை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு நடந்தான்.குரங்குக் குட்டி ஆடுவது பழத்துக்காக, குரங்காட்டி பாடுவது காசுக்காக...மொத்தத்தில் அவர்கள் ஆட்டமும் பாட்டும் அவர்களது வயிற்றுப் பிழைப்புக்காக...

மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது

காஷ்மீர மன்னன் ஒரே மாதிரியான மூன்று பொம்மைகளை அக்பருக்கு அனுப்பி வைத்தான்.  கூடவே மூன்றுக்கும் உள்ள வித்தியாசத்தையும் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்கிற துண்டுச் சீட்டு ஒன்றும் இணைத்திருந்தான்.அரசசபையிலிருந்த அத்தனை பேரும் அந்த மூன்று பொம்மைகளைப் பார்த்தனர். ஒரு வித்தியாசம் கூட இல்லாமல் மூன்றும் ஒன்றாக இருப்பதாகவே தோன்றியது.அந்த மூன்று பொம்மைகளையும் அந்தக் குறிப்பையும் பீர்பாலிடம் கொடுத்தார் அக்பர்.

பீர்பாலும் மூன்று பொம்மைகளையும் நன்றாகப் பார்த்தார். பிறகு ஒரு குச்சி எடுத்து வரச் செய்தார். பொம்மைகலின் காதில் விட்டுக் காட்டினார்.

ஒரு பொம்மைக்கு குச்சி மறு காது வழியாக வந்தது. மற்றொன்றுக்கு வாய் வழியாக வந்தது. மூன்றாவதுக்கு குச்சி வெளிப்படவேயில்லை.

" அரசே, காதில் கேட்பதையெல்லாம் பிறரிடம் சொல்லிவிடும் பொம்மை வம்புக்கார பொம்மை. இது மிகவும் மட்டமானது. ஒரு காது வழியாக உள்ளே போகும் விஷயத்தை மறு காது வழியாக வெளியிடும் பொம்மை அலட்சியமும் அசிரத்தையும் கொண்ட பொறுப்பற்ற பொம்மை. காதில் வாங்கும் விஷயத்தை வம்பளக்காமல் மனதில் தங்க வைத்து அசை போட்டு அதிலிருந்து அனுபவத்தைப் பெறும் பொம்மை முதல் தரம்" என்றார் பீர்பால்.எல்லோரும் பொம்மையைப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாத விஷயத்தை பீர்பால் கண்டு பிடித்தார். மேலோட்டமாகப் பார்க்கும் யாருக்கும் எந்த விஷயமும் தெரிவதில்லை. நுணுக்கமான அறிவுடையவர்களால்தான் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

  கோடாரிக் கஞ்சி எப்படியிருக்கும்?

ராணுவத்தில் பணிபுரிந்த படை வீரன் ஒருவன் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அவனுடைய சொந்த கிராமத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். நீண்ட தூரப் பயணத்தில் அவன் சாப்பிடுவதற்காக வைத்திருந்த ரொட்டியும், கையிலிருந்த பணமும் காலியாகி விட்டது.

ஒருநாள் அவன் ஒரு கிராமத்தை வந்தடைந்தான். இரவாகி விட்டது. எங்கே தங்கலாம்? என அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம் கேட்டான். "இன்று வழிப்போக்கர்களைத் தங்க வைப்பது அந்த ஊரிலுள்ள ஒரு பணக்காரியின் முறையாகும்" என்றார் அந்தப் பெரியவர். "ஆனால்?" என்று தயங்கிய அந்தப் பெரியவர், " அவள் ஒரு கருமி. எச்சில் கையால் காக்கையைக் கூட விரட்ட மாட்டாள்" என்றார்."அதனால் என்ன பரவாயில்லை" என்ற படை வீரன் அந்த பணக்காரியின் வீட்டிற்குச் சென்றான்.

அந்தப் பணக்காரியிடம் ," சாப்பிட ஏதாவது உணவு இருந்தால் கொடுங்களேன்" என்று கேட்டான்.ஆனால் அவள் ஒரு செவிடு போல் பாசாங்கு செய்து " நல்லது, நீங்கள் உட்காரலாமே? " என்றாள். படை வீரன் " எனக்குப் பசிக்கிறது என்று சொன்னேன்" என்றான். "நீங்கள் கவலைப்பட வேண்டாம். உட்காரும் நாற்காலி உடைந்து போகாது" என்றாள் அவள்.

"தயவுசெய்து சிறிது உணவு தாருங்கள்"என்று கெஞ்சினான். "ஆனால், என்னிடம் ஒன்றுமில்லை" என்றாள் கருமி."அப்படியானால், கஞ்சியாவது காய்ச்சிக் கொடுங்கள்"கஞ்சி காய்ச்சுவதற்கு என்னிடம் என்ன இருக்கிறது?"படைவீரன் தன் மீசையை முறுக்கியபடி, " பரவாயில்லை, எனக்கு ஒரு கோடாரி இருந்தால் கொடுங்கள். நான் கோடாரியில் கஞ்சி காய்ச்சுவேன்" என்றான்."கோடாரிக் கஞ்சியா? அதை எப்படிக் காய்ச்சுவது?" என்று ஆச்சரியப்பட்ட அவள் ஒரு கோடாரியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.அவன் பானையை எடுத்து நீரூற்றி அதற்குள் கோடாரியைப் போட்டு அடுப்பில் எடுத்து வைத்தான். நீண்ட நேரத்திற்குப் பிறகு, கஞ்சியைச் சுவை பார்த்தான். " கஞ்சி நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதில் உப்பில்லையே" என்றான். அவள் உப்பைக் கொண்டு வந்து தந்தாள்.

இன்னும் சிறிது நேரம் கழிந்தது. " இது மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால் கெட்டியாக இல்லையே. இதில் சிறிது பார்லியைப் போட்டால் சரியாகிவிடும்." என்றான்.அவள் பார்லியைக் கொண்டு வந்து தந்தாள்.

படைவீரன் தன் சமையலில் தீவீரமாக இருந்தான். " கஞ்சி தயார். சிறிது வெண்ணெய் கிடைத்தால் போதும்" என்றான்.

வெண்ணெய்யும் கொடுத்தாள் அந்த கருமி. அதிசயமான கோடாரிக் கஞ்சி குடிக்கும் ஆவலுடன் சாப்பாட்டு மேஜையில் ரொட்டியையும் பாலையும் கொண்டு வந்து வைத்தாள்.

இருவரும் சாப்பிடத் துவங்கினர். மிகவும் ரசித்து ருசித்து கஞ்சியை உறிஞ்சிக் குடித்தாள் கருமி. " மிக அருமையான கஞ்சி. அது சரி இந்தக் கோடாரியை எப்போது சாப்பிடுவது? எனக் கேட்டாள்.

படைவீரனும் தன்னிடமிருந்த கரண்டியால் அந்தக் கோடாரியைக் குத்திப் பார்த்து, " இது இன்னும் வேகாமல் இருக்கிறது. அதனாலென்ன, நான் பிறகு இதை வேக வைத்துக் கொள்கிறேன்." என்றபடி கோடாரியை எடுத்துத் தன் பைக்குள் வைத்துக் கொண்டான்.

ஆக, அந்தக் கருமியிடமிருந்து உணவைப் பெற்றதோடல்லாமல் அவளுடைய கோடாரியையும் சாமார்த்தியமாகக் கவர்ந்து கொண்டான், அந்தப் படைவீரன்.

-ரஷ்ய கிராமியச் சிறுகதை


 

பொது எதிரி வரும் பொழுது...

மைனா குருவி அழகாக இருக்கும். சின்னத் தலையை ஆட்டி ஆட்டி நடக்கும். மிளகு போன்ற கண்கள் இருப்பதே தெரியாது. மஞ்சள் வண்ண அலகால் புழுவைக் கொத்திப் பிடிக்கும். வாயைத் திறந்து கொண்டு, சின்னக் கால்களால் தத்தித் தத்தி நடக்கும்.

தோட்டத்தைச் சுற்றிலும் மைனாக்குருவிகள் கூ..கூ.. என்று கத்திக் கொண்டே அங்கும் இங்கும் நடந்தன. பறந்தன. ஒரு குருவி பறந்தால் அனைத்துக் குருவிகளும் பறந்தன.

திடீரென அனைத்துக் குருவிகளும் கீச்.. கீச்.. என்று சத்தமிட்டபடி ஒரு குருவியைக் கொத்த ஆரம்பித்தன. அந்த ஒரு குருவியின் தலைமயிர் சிலிர்த்து இருந்தது. எதிர்த்துப் போராடியது. அந்த ஒரு குருவியை ஒவ்வொரு குருவியும் மாற்றி மாற்றிக் கொத்தியது. அந்தக் குருவியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.என்ன நடக்கிறது என்று பார்க்க அருகில் சென்ற பொழுது, அனைத்துக் குருவிகளும் பறந்தோடின. கொத்திக் கொண்டிருந்த குருவியையும் அழைத்துக் கொண்டு பறந்தோடின. ஒரு குருவி கூட இருக்கவில்லை.தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்த குருவிகள், பொதுவான எதிரி வருவதைக் கண்டதும், ஒன்றாகச் சேர்ந்து தப்பி ஓடியது வியப்பாக இருந்தது.

பொது எதிரி வரும் பொழுது நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்கிற உயரிய உண்மையை அந்தச் சின்ன மைனாக் குருவிகள் வழியாக அறிய முடிந்தது.

  காகமும் சுடரொளியும்

கா... கா.... என்று கத்திக்கொண்டு அந்தக் காகம் பறந்து வந்தது. அருகிலுள்ள மரக்கிளையில் அமர்ந்தது.

சுடரொளி அந்தக் காகத்தைப் பிடிக்க ஓடினான். உடனே அது பறந்தது. சுடரொளி திரும்பி வந்தான். அந்தக் காகம் மீண்டும் அங்கு வந்து நடந்தது. சுடரொளி தான் தின்று கொண்டிருந்த வடையைப் பிய்த்துக் காகத்துகுப் போட்டான்.

காகம் வேகமாக ஓடி வந்தது. வடையைக் கொத்திக் கொண்டு பறந்தோடியது. சுடரொளிக்கு அந்தக் காகத்தைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. வெகுநேரம் காத்திருந்தான். அந்தக் காகம் மீண்டும் வரவேயில்லை.

இரண்டாம் நாள் அந்த இடத்திற்கு, அதே நேரத்திற்கு அந்தக் காகம் வந்தது. அங்கும் இங்கும் நடந்தது. இன்று அந்தக் காகம் கைக்கு எட்டும் தொலைவிற்குள் நடந்து வந்தது. சுடரொளி தன்னிடம் இருந்த நிலக்கடலையை காகத்தின் முன் வீசினான். காகம் தலையைச் சாய்த்துச் சாய்த்துப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு கடலையாகக் கொத்தித் தின்றது. சுடரொளி அருகில் சென்றதும் உடனே பறந்தோடியது.

மூன்றாம் நாளும் அந்தக் காகம் அந்த இடத்துக்கு, அதே நேரத்துக்கு வந்தது. இன்று அச்சப்படாமல் காகம் சுடரொளியின் அருகில் வந்தது. சுடரொளியின் கையை ஆவலோடு பார்த்தது. சுடரொளி வீட்டிற்குள் சென்று அரிசியை எடுத்து வந்து போட்டான். காகம் பொறுமையாக ஒவ்வொரு அரிசியாகப் பொறுக்கித் தின்றது. சுடரொளி காகத்தைப் பிடிக்க எழுந்தான். காகம் பறந்தோடியது.

ஒவ்வொரு நாளும் காகம் சரியான நேரத்துக்கு வந்தது. சுடரொளியும் காகமும் நண்பர்களானார்கள். சுடரொளி சொல்லுவதைக் கேட்டுக் காகம் புரிந்து கொண்டது போலத் தலையை ஆட்டும்.

சரியான நேரத்துக்கு வரும் காகத்தைக் கண்டு சுடரொளி வியந்தான். காகத்தால் எப்படி முடிகிறது? மணிக்கூடு இல்லை, பேசத் தெரியாத, எழுதத் தெரியாத,ஆனால் சரியான நேரத்துக்கு அந்தக் காகம் எப்படி வந்து போகிறது. சுடரொளி வியந்தான்.தனது நண்பனான காகத்தைப் போல, தானும் சரியான நேரத்துக்குப் பள்ளிக்குச் செல்வது, அனைத்து வேலைகளையும் சரியான நேரத்தில் தொடங்குவது என முடிவு எடுத்துக் கொண்டான்.சரியான நேரத்துக்குப் பள்ளிக்கு வந்து அனைத்தையும் முறையாகச் செய்யும் சுடரொளியை அனைவரும் பாராட்டினார்கள்.

-பொள்ளாச்சி நசன்

தகுதியில்லாதவருக்குச் சொன்ன அறிவுரை...

ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.

ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது.

அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது.

குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,

"குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே?" என்றது.

ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது.

"வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங் குருவிகள் அறிவுரை சொல்வதா?" என்று எண்ணியபடி,

"எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள்வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? " என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.
பாவம் தூக்கணாங் குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது.தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

பசித்தவன் விசுவாசத்தை நம்பலாமா?
கிணறு ஒன்றில் கங்காதத்தன் என்ற கிழத்தவளை ஒன்று வசித்து வந்தது. இந்தத் தவளையை அங்கிருந்த மற்ற தவளைகள் அடிக்கடி தொல்லைப் படுத்திக் கொண்டிருந்தது.
மற்ற தவளைகள் கொடுத்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத கிழத்தவளை இராட்டினத் தோண்டி வழியே வெளியே வந்து மற்ற தவளைகளை என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருந்த போது அந்தக் கிணற்றுக்கு அருகிலிருந்த பாம்புப் புற்று அதன் கண்ணில் பட்டது.
"நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும் தவளைகளை இந்தப் புற்றிலிருக்கும் பாம்பின் உதவியோடு கொன்று விட்டால் என்ன?" என்கிற எண்ணம் வந்தது.
மெதுவாகப் பாம்புப் புற்றின் அருகில் சென்று பாம்பை நட்புக்கு அழைத்தது.
"உங்களுடைய பரம எதிரியான என்னுடன் நட்பு வைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புவது ஏன்?" என்று கேட்டது அந்த பாம்பு.
"என்னுடன் இருக்கும் சில தவளைகள் என்னை தினந்தோறும் துன்புறுத்தி வருகின்றன. என்னால் பொறுக்க முடியவில்லை. அவற்றை அழிக்கத்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். வேண்டாதவர்களை எதிரியைக் கொண்டே அழிக்கலாம் என்று நீதி நூலில் கூட சொல்லியிருக்கிறது" என்றது அந்த கிழத்தவளை."என்னால் எப்படி உன் இடத்திற்கு வரமுடியும்?"
"நான் வரும் இராட்டினத்தின் வழியாக உன்னை அங்கு அழைத்துச் செல்கிறேன்" என்றது தவளை.பாம்பும் யோசித்தது.
நாமோ தினமும் உணவிற்காகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இப்படி வலிய வந்து உணவிற்கு வழி செய்யும் தவளையின் கோரிக்கையை நாம் ஏன் மறுக்க வேண்டும்? என்று நினைத்தபடி தவளையுடன் அந்த கிணற்றுக்குள் சென்றது.
அந்த பாம்பும் கிணற்றுக்குள் அந்த கிழத்தவளைக்குத் தொல்லை கொடுத்து வந்த தவளைகளை எல்லாம் தின்று அழித்தது. கிழத்தவளையும் மகிழ்ச்சியுற்றது.
ஆனால் அந்த மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. பாம்பு கிழத் தவளையைப் பார்த்து, "உன்னுடைய எதிரிகள் எல்லாம் அழிந்து விட்டபடியால் என் பசிக்கு வேறு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்." என்றது
கிழத்தவளையோ, "நண்பரே நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது . உங்கள் உதவிக்கு நன்றி. எனக்கு இனி உங்கள் உதவி தேவையில்லை." என்றது.

ஆனால் பாம்போ கோபத்துடன், "உன்னை நம்பித்தான் நான் இங்கு வந்தேன். இப்போது என்னுடைய இடத்தில் வேறு ஏதாவது வந்து குடியேறியிருக்கும். தினந்தோறும் எனக்கு நீயே ஒரு தவளையை உணவாகக் கொடுக்க வேண்டும். இல்லையேல் உன் கூட்டத்தில் இருப்பவர்களை நான் என் விருப்பப்படி பிடித்துத் தின்று என் பசியைப் போக்கிக் கொள்வேன்." என்று அச்சுறுத்தியது.

கிழத்தவளையும் பயந்து போய் தினந்தோறும் ஒரு தவளையை பாம்புக்குக் கொடுத்து வந்தது. கடைசியில் ஒருநாள் அது கிழத்தவளையின் மகனையும் தின்று தீர்த்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற கிழத்தவளையின் மனைவி, "நீங்கள் இந்தக் கொடியவனைக் கொண்டு வந்து நம் குழந்தையை மட்டுமில்லை, குலத்தையே அழித்து விட்டீர்கள். இனி நாமிருவர் மட்டும்தான் பாக்கி. நாமும் அழிந்து விடுவதற்கு முன்பு ஏதாவது சூழ்ச்சி செய்து அந்த பாம்பைக் கொன்று விடுங்கள் அல்லது நாமிருவரும் இங்கிருந்து தப்பித்துச் சென்று விடுவோம்." என்று எச்சரித்தது.

அந்த சமயத்தில் அங்கு வந்த பாம்பு தனக்குப் பசியாக இருப்பதால் "ஏதாவது கொடு" என்று கேட்டது.

உடனே கிழத்தவளையும், "நண்பரே நாங்கள் இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் இப்போதே என் மனைவியை அனுப்பி வேறு கிணற்றிலிருந்து தவளைகளை இங்கே அழைத்து வரச் சொல்கிறேன்." என்று மனைவியை அங்கிருந்து போகச் செய்தது.

சில நமிடங்கள் கழிந்த பின்பு, "நீ எவ்வளவு நேரம்தான் பசியைப் பொறுத்துக் கொண்டிருப்பாய்? நானே வேகமாய்ப் போய்த் தவளைகளை அழைத்து வருகிறேன்" என்றபடி இராட்டினத்தின் வழியே அக்கிணற்றை விட்டு வெளியேறியது.

தன் பசிக்கு உணவு கொண்டு வரச் சென்ற கிழட்டுத்தவளையும் அதனுடைய மனைவியும் ஒரு நாளாகியும் வராமலிருக்கவே பாம்பு ஏமாற்றமடைந்தது.

கிணற்றுச் சுவற்றிலிருந்த ஒரு பல்லியைப் பார்த்த அந்த பாம்பு, "பல்லியாரே, அந்தக் கிழட்டுத் தவளைக்கு நீயும் நண்பன்தானே, நீ அந்தத் தவளையிடம் சென்று, நான் அந்தத் தவளைக்குத் துரோகம் செய்யமாட்டேன் என்று நான் உறுதியளித்ததாகச் சொல்லி பயப்படாமல் வரச் சொல்" என்று தகவல் சொல்லி அனுப்பியது.பல்லியும் அந்தக் கிழட்டுத்தவளையைத் தேடிச் சென்று பாம்பு சொன்ன செய்தியைச் சொல்லியது.

அதற்கு அந்தக் கிழட்டுத்தவளை "பசித்தவன் விசுவாசம் நம்ப முடியாதது. அந்தக் கொடியவனிடம் நட்பு வைத்து என் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து விட்டேன். நான் இனி அங்கு வர மாட்டேன்." என்று சொல்லி அனுப்பியது.
இப்படித்தான் நாம் நம்முடைய சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தீயவர்களோடு நட்பு கொண்டால் அந்தத் தீயவர்கள் நம்மையும் சேர்த்து அழித்து விடுவார்கள். நட்பு கூட நல்லவர்களோடுதான் இருக்க வேண்டும். இல்லையேல் இழப்பு நமக்குத்தான்.

1 comment:

  1. இங்கிருக்கும் கதைகள் முத்துக்கமலம் இணைய இதழில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. “நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிடுவதில் என்ன தயக்கம்?

    ReplyDelete